Project Sivaganga
வணக்கம் சிவகங்கை!
“எங்க இருக்கு உங்க ஊர்?” “என்ன இருக்கு உங்க ஊர்ல?”
இந்த கேள்வி பலபேர் என்னிடம் கேட்ருக்காங்க! ஆனால் அதற்கான பதில் என்னவோ இதுவரை இருந்ததில்லை.
ஓவ்வொரு முறையும் “காரைக்குடி செட்டிநாடு” உணவகமோ அல்லது “நிதியமைச்சர் சிதம்பரம் தொகுதி” என்று தான் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.
ஏன் நம்ம வேலுநாச்சியார் இல்லையா? உடன்நின்ற மருது சகோதரர்கள் இல்லையா? இதே கேள்வி எனக்குள்ளும் எழுகிறது!
சிவகங்கையின் வரலாற்றை அவர்களை தவிர்த்து எழுதிவிட முடியாது. ஆனால் நாம ஏன் இன்னும் அவர்களை நினைவில் வைத்திருக்கிறோம்னு யோசிச்சிருக்கீங்களா?
விடுதலை என்ற ஒற்றை நோக்கத்தை முன்னெடுத்த தலைவர்கள்! அவர்தம் வீரம், தலைமை தான் நம் நினைவில் நிற்கிறது!
சரி இது வரலாறு. இப்போ என் இதை நினைவுபடுத்தனும்?
தேர்தல் நேரம் ஆதலால், ஓர் இளைஞர் இதே கேள்வியை காணொளியில் எழுப்பியிருந்தார். நிறைய மாற்றங்கள் வேண்டும், தலைவர்கள் அதற்கான வழிவகை செய்யவேண்டும் என்பது அவர் கோரிக்கை!
இங்குதான் எனக்கு கருத்து வேறுபாடு எழுந்தது! நாம என் எப்பொழுதும் தலைவர்களை எதிர்பார்க்கிறோம்?
ஒரு தலைவன் விண்ணிலிருந்து பிறப்பதில்லையே! வீழ்ந்த போதும் எழுந்து நிற்பவன் அல்லவோ தலைவன்! தனியே நிற்பவன் அல்ல தலைவன், தன் மக்கள் முன்னிற்பவன் தலைவன்! நிற்க.
அந்த இளைஞரின் கோரிக்கையில் எந்த தவறும் இல்லை! கடைநிலை மக்கள் எழுச்சி கொள்கிறார்கள் என்றால் அங்கு, தலைமை தன் கடமையை செய்ய தவறியிருக்கிறது!
தலைமை என்பது இங்கு அரசியல் தலைமை. எல்லா கோரிக்கைகளுக்கும் அரசியல் தலையீடு தேவையில்லையே!
என் வீட்டில் ஒரு குறை இருந்தால் நான் அதை சரிசெய்ய மாட்டேனா? ஏன் நம்ம தெருவிலோ, பள்ளியிலோ, கல்லூரியிலோ அதை செய்யக்கூடாது?
சிவகங்கையில் மாவட்டத்தில் இருந்து, அரசு பேருந்து, மற்றும் ரயில் தவிர்த்து, தினம் 70 தனியார் பேருந்துகள் சென்னைக்கும் பெங்களூருக்கும் செல்கின்றன. சுமார் இரண்டாயிரம் மக்கள் தினம் பயணம் செய்கிறார்கள்! பலர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்!
பத்திற்கும் மேற்பட்ட கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் செய்லபடுகின்றன! வருடத்திற்கு சுமார் ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சியடைகிறார்கள்!
மனித வளத்திற்கு எவ்வித குறையும் இல்லா மண் இது! மாற்றத்திற்கான ஒரு திட்டம் இல்லையா நம் இளைஞர்களிடம்?
கனவுகளுடன் கல்லறைக்கு செல்வதா? கனவுகளை செயல்படுத்த வேண்டாவா?
உங்களிடம் கனவு இருக்கிறதா? திட்டங்கள் இருக்கிறதா?
வாருங்கள் ஒன்றிணைவோம், நம் கனவு திட்டங்களுக்கு உயிர் கொடுப்போம்!
மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும்!